குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிரான டெல்லி போராட்டத்தில் கலவரம் வேடித்தது. இதில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையிஸ் நடிகர் ரஜினிகாந்த், "மத்திய உள்துறை மற்றும் உளவுத்துறையின் தோல்வியே வன்முறைக்கு காரணம். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இது போன்ற போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இது போன்ற போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும். சில அரசியல் கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை" என தெரிவித்தார்.
இந்த கருத்து முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மத்தியில் நீண்ட விவாதங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை சட்ட திருத்ததில் இருக்கக்கூடிய பாதிப்புகள் பற்றி ரஜினிகாந்திற்கு விளக்கம் தேவை, அதை அளிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தன. இதற்கு ரஜனி சம்மதம் அளித்தார்.
இந்நிலையில் ஹக் கமிட்டி தலைவர் அபூபக்கர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேரில் சந்தித்து அவருடன் விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " ரஜினிகாந்த் மிகுந்த அறிவு உள்ளவர். அவருக்கு சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி பற்றி புரியவைக்கவேண்டிய அவசியமில்லை. அவர் அதை நன்றாக படித்து தெரிந்து வைத்துள்ளார். அவர் எங்களுக்கு விளக்கம் அளிக்க கூடிய அளவுக்கு திறமையாகத்தான் உள்ளார். ரஜினியின் ஒரே எண்ணம், நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரே தொப்புள்கொடி உறவுகள், நமக்குள் எந்த பாகுபாடும் இருக்க கூடாது என்பதும் நாடு பொருளாதாரத்தில் நன்றாக வர வேண்டும் என்பதும்தான்" என தெரிவித்தார்.