Published on 15/11/2019 | Edited on 15/11/2019

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது. தொடர்ந்து நடந்த வேலூர் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது தேமுதிக. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து அதிமுகவிடம் பேச ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த். தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான இந்த குழுவில் தேமுதிக அவைத் தலைவர் வி.இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.