பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. பெட்ரோல், டீசலின் தொடர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேலும், தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆளும் பாஜக மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகள் ஆதரவாகவும், எதிர்க்கட்சிகள் இது அரசியல் காரணம் என்றும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடந்து முடிந்த 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், மூன்று மக்களவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் முடிவுகளின் விளைவாகவே மத்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது. அதிக வரி விதிப்பினால் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. மத்திய அரசின் பேராசையால்தான் வரி உயர்வு என்பது எங்கள் குற்றச்சாட்டு” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாட்டு மக்களுக்கு தீபாவளியின் இந்த பரிசு சாமானியனுக்கு நிம்மதியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் குறைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.