சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதன்பிறகு அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், '' டெண்டர் முறைகேடு நடந்துள்ளது. எல்லோரும் ஒப்பந்தம் விடுவார்கள் ஒப்பந்தம் விட்ட பிறகு பணியைத் தொடங்குவார்கள். பணி முடிந்த பிறகு பில் வாங்குவார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அப்படி இல்லை ஒப்பந்தம் பெற்றவுடனே பணி செய்யாமலேயே பில்லை வாங்குகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவதற்கு இதுவே பெரிய சான்று. கரூரில் நடந்துள்ளது. ஒருசில அதிகாரிகளை மட்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் மூலமாக மட்டும் இது நடக்காது. யாரோ ஒரு அதிகார மிக்கவருடைய ஆணையின் பெயரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும் என்பதைத் தவிர மற்றபடி சாலை அமைக்காமல் பில் கொடுக்க மாட்டார்கள்.
டாஸ்மாக் முறைகேடு பற்றி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. 24 மணி நேரமும் பார் இருக்கிறது. நீங்களே போய் பாருங்கள் நான் சொல்வது சரியா தவறா என்று, 24 மணி நேரமும் பாரில் மதுபானம் விற்கிறார்கள். அதேபோல் இல்லீகலாக நிறைய பார்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கலால் வரி செலுத்தாமல் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மதுபானங்களைக் கொண்டு வந்து விற்கிறார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இழக்கிறது. இப்படி மதுபானத்தில் மிகப்பெரிய கொள்ளை நடக்கிறது. அதையும் விசாரிக்க வேண்டும் இதில் கணக்கே தெரியாது.
அதேபோல் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடைச் சட்டத்தை ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆளுநரின் செயல்பாடு நன்றாகத்தான் இருக்கிறது. திமுக செய்கின்ற இப்படியான பெரிய ஊழல்களைத் தட்டி கேட்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா அந்த ஆள் ஆளுநர்தான். அவர்தான் தட்டிக் கேட்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறக்கூடிய அட்டூழியங்கள், மிகப்பெரிய ஊழல்களை நாங்கள்தான் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்; அவர்தான் விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கப்படும் பொழுது ஆளுநர் விமர்சிக்கப்படுகிறார்'' என்றார்.