நடிகர் ரஜினிகாந்த கடந்த ஆண்டு இறுதியில் தனது கட்சியின் பெயர் மற்றும் ஆரம்பிக்கும் தேதி ஆகியவற்றை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பின் 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஐதராபாத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு திடீரென ரத்த அழுத்த அளவில் மாறுபாடு இருந்த காரணத்தினால் மூன்று நாட்கள் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதன்பின் தான் கட்சி ஆரம்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதையொட்டி ரசிகர்கள் சிலர், 'ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின், 'ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினால், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விரும்பும் கட்சியில் இணைந்து கொள்ளலாம்' என கடந்த 18ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வந்தனர்.
இந்நிலையில், ரஜினி மன்றத்தில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 மாவட்டச் செயலாளர்கள் கடந்த வாரம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.