Skip to main content

“வேண்டுமென்றே வன்முறைக் களத்தை உருவாக்குவதை அரசு வேடிக்கை பார்க்காது” - அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

'Government will not entertain the deliberate creation of an arena of violence'- Minister Thangam Thennarasu condemns

 

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்ந்து இன்று பாமகவினர் என்.எல்.சி முன்பு நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. காவலர்கள் தாக்கப்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாகவும், முன்னதாகவே பேருந்து மீது கல்வீச்சுகள் நிகழ்ந்ததன் காரணமாகவும் கடலூரில் இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

'Government will not entertain the deliberate creation of an arena of violence'- Minister Thangam Thennarasu condemns

 

இந்நிலையில் என்.எல்.சிக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ''குறுகிய கால அரசியல் லாபத்திற்காக வன்முறை நடத்தியவர்களுக்குக் கண்டனம். வன்முறைக்காகக் களத்தை வேண்டுமென்று உருவாக்குவதை அரசு வேடிக்கை பார்க்காது. விவசாயிகளைப் பலவீனமாகச் சித்தரித்து அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்திப் போராடியது கண்டனத்திற்குரியது. பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக முக்கியமானது. அதை மேற்கொண்டால் தான் பிற பணிகளைச் செய்ய முடியும். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக ரீதியிலான அமைதிப் போராட்டம் என்பதாலேயே போராட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது. சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்