இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் நாளை (01.06.2024) நடைபெற உள்ளது. இதனை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து நேற்று (30.05.2024) மாலை 5 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையும் முடிந்தது. ஜூன் நான்காம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு ஊடகங்களுக்குப் பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வந்தார். அந்த வகையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. மகாத்மா காந்தி பற்றிய திரைப்படம் வெளியாகும் வரை அவரைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்ட்ர் பூங்காவில் இரண்டாம் உலகப்போரின் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில் சிலைக்கு அருகில் பாராளுமன்ற கட்டிடத்தின் முகப்பை நோக்கிய வண்ணம் மகாத்மா காந்தியடிகளின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சென்றிருந்த வேளையில் நேற்று (30.05.2024) வெஸ்ட் மினிஸ்டர் பூங்காவில் இருக்கும் காந்தியடிகளின் சிலைக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினேன். மேலும், காந்தி திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வருவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் டேவிஸ்டாக் சதுக்கத்தின் நடுவில் காந்தியடிகளின் நூற்றாண்டு பிறந்தநாளின் போது 1968 ஆம் ஆண்டு அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கிலாந்து சென்ற போது எனக்கு தெரிந்தது. இது ஏன் மோடிக்கு தெரியவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.