தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவனை நேரில் சென்று சந்தித்தார்.
பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் காயத்ரி ரகுராம் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை காயத்ரி ரகுராம் நேரில் சந்தித்துள்ளார். புத்தகம் வழங்கி அவரை திருமாவளவன் வரவேற்றார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், “எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது... விசிக தலைவர், எம்.பி., அண்ணா தொல். திருமாவளவன் அவர்களுக்கும் விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து திருமாவளவன் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராம் அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்-14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்கவிருக்கும் சக்தியாத்ரா வெற்றிபெற வாழ்த்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.