தமிழகம் முழுவதும் திமுகவில் இளைஞர் அணி சார்பில் திராவி மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 24-ம் தேதி திண்டுக்கல்லில் நடக்க இருக்கிறது. அதற்காக திண்டுக்கல் மாநகரில் உள்ள 48 வார்டுகளில் இருக்கும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு பகுதியில் உள்ள பகுதி செயலாளர்கள் தலைமையில் மாநகர செயலாளரும், மாநகர துணை மேயருமான ராஜப்பா, திராவிட மாடல் பயிற்சி கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இதில் கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர 17வது வார்டு கவுன்சிலர்களான வெங்கடேஷ் உள்பட பல கவுன்சிலர்கள், மாநகர பொறுப்பாளர் சரவணன் மற்றும் பகுதி செயலாளர்கள் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய மாநகர செயலாளர் ராஜாப்பா, “திராவிட மாடல் பயிற்சிக் கூட்டத்திற்கு ஒவ்வொரு வார்டுகளில் இருந்தும் இளைஞர் அணியினர் மூன்று பேர், மாணவ அணியினர் மூன்று பேர் என ஆறு பேரை தேர்வு செய்து திராவிட பயிற்சி பாசறைக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டும். அங்கு தலைமை கழகத்திலிருந்து வரக்கூடிய நிர்வாகிகள் திராவிட மாடல் பயிற்சியை பற்றி விளக்குவார்கள். அதன் மூலம் அந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது.
கட்சியில் இளைஞர்களையும், மாணவர்களையும் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியினர் அடாவடி செய்து உங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை, மாணவர்களை இழுக்க பார்ப்பார்கள் அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நம் முதல்வர் ஸ்டாலினே இளைஞர் அணியில் இருந்து வந்து தான் தற்பொழுது முதல்வராகி மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். வருங்காலத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தான் மாநகரத்தை ஆளவும் போகிறார்கள். அதனால் இளம் இரத்தங்களை கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து திராவிட மாடல் பாசறை கூட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை கவுன்சிலர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் மாநகர செயலாளரும், பகுதி செயலாளரும் வழங்கினார்கள்.