“எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டுள்ளார்கள். இதை தலைகுனிவாகவும் வெட்கக் கேடாகவும் பார்க்கிறேன்” என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை மாதவரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “என்.எல்.சி விவகாரத்தில் பாமக மட்டும் தான் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினார்கள். மற்ற கட்சியினர் இதுவரை எதுவும் செய்யவில்லை என சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. விஜயகாந்த் விருதாச்சலத்தில் எம்எல்ஏவாக இருந்த காலத்திலிருந்து இந்த பிரச்சனை இருக்கிறது. என்.எல்.சி சேர்மேனை நானே நேரடியாக போய் சந்தித்து விரிவாக்கம் செய்யக்கூடாது என சொல்லியிருக்கிறேன். மக்களின் விவசாய நிலத்தை எடுத்துக்கொண்டு உரிய இழப்பீடும் அவர்களுக்கு தரவில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என சொன்னார்கள். அதையும் நிறைவேற்றவில்லை. அதனால் மக்கள் இதை கடுமையாக எதிர்க்கும் நிலை உள்ளது. அனைத்து கட்சிகளும் இதில் போராடிக்கொண்டு தான் உள்ளோம். ஆனால் இது மத்திய அரசும் மாநில அரசும் எடுக்க வேண்டிய முடிவு.
திட்டம் கொண்டு வருவது மக்களுக்காகத்தான். ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை மீறி திட்டம் கொண்டு வருவது நிச்சயம் வெற்றி பெறாது. இத்தனை ஆண்டு காலம் என்.எல்.சியை அங்கு நடத்தவிட்டது மக்கள் தான். அப்பொழுதெல்லாம் ஒத்துக்கொண்ட மக்கள் இப்பொழுது ஏன் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என அர்த்தம்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. நடுரோட்டில் வெட்டுவது, ஏடிஎம் கொள்ளை, செயின் பறிப்பு இவை அனைத்திற்கும் காரணம் டாஸ்மாக் தான். தமிழ்நாடு போதையின் தமிழ்நாடாக மாறிவிட்டது. பள்ளி மாணவர்கள் கூட உபயோகிக்கிறார்கள். அப்பொழுது ஒழுக்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். ஆட்சியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டுள்ளார்கள். இதை தலைகுனிவாகவும் வெட்கக்கேடாகவும் பார்க்கிறேன். அவர் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். வழக்கை பதிவு செய்வதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும். கீழ்த்தரமான அரசு நடக்கிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணம். செல்போனை திருடி பிழைக்க வேண்டும் என்று அவருக்கு என்ன வந்தது. முதலமைச்சராக இருந்தவர் மீது முகாந்திரம் கொண்ட வழக்குகள் பதிந்தால் அது சரி. இதுபோன்ற வழக்கை பதியும் போது அவர்கள் தரத்தை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.