சொத்து வரி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் 13 மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பது போட்டிக் கூட்டம் இல்லை. ஓபிஎஸ் பிரைவேட் கம்பெனிக்கு நடக்கும் நிர்வாகிகள் கூட்டம் தான் அது. இவ்வாறு நடப்பது கட்சி கூட்டம் இல்லை. ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து நியமித்தவர்களுக்கான கூட்டம் நடத்துகிறார்கள். அதிமுகவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரது செயல்பாடுகள் ஒருபோதும் அரசியலில் எடுபடாது. அவரிடம் உள்ளவர்கள் அதிமுகவின் தொண்டர்களே கிடையாது.
'எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்வோம்' என்று பண்ருட்டி ராமசந்திரன் பேசி இருக்கிறார். அவர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று தெரியவில்லை. பண்ருட்டி ராமசந்திரன் தனது பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் கூடாநட்பை தவிர்ப்பது நல்லது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் இருக்கிறது. பாஜகவுடன் நட்பு தொடர்கிறது. ஆனால் அது கூட்டணியா என்பது குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு எடுக்க முடியும். பூத் கமிட்டி போட்டு இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.
திமுக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்பு அலை நிச்சயம் எங்களுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் அதிமுக அரசின் நல்ல திட்டங்களை மக்கள் நினைத்து பார்க்கிறார்கள். பரந்தூர் விமான நிலைய திட்டம் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டதாக திமுகவினர் விமர்சிக்கிறார்கள். நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்றால் நிறுத்தி விடலாமே. திமுகவினர் வீட்டில் உலை கொதிக்கவில்லை என்றாலும் அதிமுகவை தான் குற்றம் சொல்கிறார்கள்" என்று பேசினார்.