கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று கர்நாடக பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தேர்தல் பணிகளில் மூன்று முதன்மைக் கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் என அதிகமானோர் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க சென்றதால் சட்டசபைக்கு பெரும்பாலானோர் வரவில்லை. இதனால் சட்டசபை பரபரப்பு இன்றி நடைபெற்றது. இன்று அறிவிக்கப்படும் பட்ஜெட் கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியமான பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஆட்சியில் பாஜக தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதாலும் அடுத்த சில மாதங்களில் அம்மாநிலத்திற்கு தேர்தல் வர இருப்பதாலும் மக்களுக்கு அதிகமான வரிகளை ஏற்படுத்தும் திட்டங்களை பாஜக தவிர்க்கும். மேலும் மக்கள் அதிகளவில் பயன்பெறும் திட்டங்களாக அறிவிக்கப்படும்.
மேலும் பாஜக அறிவித்த திட்டங்கள் யாவும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பட்ஜெட்டை அறிவித்த பாஜக தேர்தலில் தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அந்த அரசு புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிற்கு வரும் 2ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விவாதம் நடைபெறும். 24 ஆம் தேதி பட்ஜெட் மீது முதல்வர் பசவராஜ் பொம்மை பதில் அளிப்பார்.
கர்நாடகத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த பட்ஜெட் மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக அரசு மக்களை வஞ்சித்துவிட்டதாகக் கூறி கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் காதில் பூ வைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.