ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்த நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது நேரடியாக அதிமுகவே போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர் குறித்து முன்னாள் அமைச்சர்களுடன் பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தாங்களும் போட்டியிடவுள்ளதாகவும், விரைவில் வேட்பாளரை அறிவிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.