Skip to main content

மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

seeman

 

முறையாக வடிவமைக்கப்படாத துறைமுகங்களால் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் துறைமுகத்திற்குள் அலை அடிக்கும் அவல நிலை உள்ளது. இதனால் காற்று வேகமாக வீசும் ஆனி, ஆடி மாதங்களில் எழும் இராட்சத அலையில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் பலியாவது வேதனை தரும் வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.

 

கடந்த 23-7-2020 அன்று காலையில் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற முள்ளூர்துறையைச் சேர்ந்த ஆன்றணி (வயது 65) என்பவர் அலையில் சிக்குண்டு படகு கவிழ்ந்ததில் காணாமற்போனார். அதே போன்று (24-7-2020) மாலை நாட்டுப்படகில் கரை திரும்பியபோது துறைமுக இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மார்த்தாண்டந்துறையைச் சார்ந்த ஷிபு (வயது 24) என்பவரும் காணாமற்போயுள்ளார்.

 

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடல் சீற்றத்தில் சிக்குண்டு பலியாயினர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இருவரையும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாரின் துயரத்திலும் பங்கு கொள்கிறேன்.

 

கடல் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீனவர்களையும் படகுகளையும் பாதுகாப்பதற்காக மீனவர்களின் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கட்டப்பட்ட மீன்பிடித் துறைமுகம் சரியான வடிவமைப்பில்லாமலும் ஆய்வு செய்யப்படாமலும் கட்டப்பட்ட காரணத்தால், இன்றும் துறைமுகத்தின் உள்ளேயே இராட்சத அலைகள் உருவாகி மீனவர்களுக்கும், அவர்களுடைய படகுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

 

மேலும் மீன்பிடித் துறைமுகத்தின் மிக அருகிலேயே புதிதாக ஒரு தடுப்பணையைக் கட்டுவதால் ஆற்றுநீர் கடலுடன் கலப்பதில் பெரும்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் அலைகளால் கொண்டுவரப்படும் மணல்கள் சேர்ந்து மணல்மேடு உருவாகிறது. மீனவர்களின் படகுகள் இந்த மணல்மேடுகளில் மோதி விபத்துகள் நடப்பதும் தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு எதிர்பாராத விபத்துகளினால் பேராபத்து ஏற்படுகிறது. இதனால் வருடத்திற்கு 4 முதல் 10 மீனவர்கள் வரை இப்படித் துறைமுக விபத்தில் சிக்கி பலி ஆகிறார்கள் என்பது வேதனையான உண்மை.

 

இவ்வாறாகச் சரியான திட்டமிடாமல் அமைந்த துறைமுகக் கட்டுமானத்தாலும், புதிதாகக் கட்டப்படும் தடுப்பணையாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. பல இயற்கை பேரிடர்களினாலும், சிங்கள பேரினவாதத்தாலும் தங்கள் வாழ்வில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மீனவச் சொந்தங்கள் இதுபோன்ற துறைசார் சீர்கேடுகளினாலும் விபத்துகளில் சிக்குண்டு மேலும் இன்னலுக்கு ஆளாகி உயிரிழப்புகளும் பொருளிழப்புகளும் ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு ,

 

1. தமிழகத்தில் உள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களையும் உடனடியாக ஆய்வு செய்து ஒழுங்கற்று அமைந்துள்ள துறைமுகங்களைச் சீர்படுத்த முன்வரவேண்டும்

 

2. மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தினை ஆழப்படுத்திப் பாரம்பரிய மீனவர்களின் அனுபவ அறிவின் துணைக்கொண்டும், கடல்சார் அறிவியல் வல்லுநர்களின் துணைக்கொண்டும் துறைமுகத்தின் தரத்தினை முறையாக மேம்படுத்திட வேண்டும்.

 

3. துறைமுகத்தின் மிக அருகிலேயே அமைய இருக்கும் தடுப்பணை வேலைகளை உடனடியாகத் தடை செய்து துறைமுகத்திற்கும், மீனவர்களுக்கும், சமவெளி மக்களுக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படாத வண்ணம் திட்டமிட வேண்டும்.

 

4. கடல் சீற்றத்தால் இறந்து போன மீனவர்களின் குடும்பத்திற்கு முறையான இழப்பீட்டினை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

5. மீனவர்களுக்கும் சமவெளி மக்களுக்குமான குடிநீர் தேவைக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

 

மேற்கண்ட வழிமுறைகளைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி மீனவர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென்றும் அவர்களின் நல்வாழ்விற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்