ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் இடையே இருக்கும் சண்டையால் அமமுக உருவாக்கப்பட்டதன் நோக்கம் மக்களுக்குப் புரிந்துள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அடுத்தாண்டு நவம்பர் டிசம்பரில் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஏற்கனவே ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆட்சி அதிகாரம் பழனிசாமி கையில் இருந்ததால் தான் ஆட்சியின் லாபங்களுக்கு அங்கு இருந்தனர். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அமமுகவில் தான் இருக்கிறார்கள்.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் இடையே இருக்கும் சண்டையால் அமமுக உருவாக்கப்பட்டதற்கான எங்கள் நோக்கம் மக்களுக்குப் புரிய ஆரம்பித்துள்ளது. அதிமுக நீதிமன்றத்தில் செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இருவரும்தான். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அரசு சரியான முடிவு எடுத்து தமிழகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றித் தர வேண்டும். மதத்தினை வைத்து அரசியல் செய்வதாக ஸ்டாலின் சொல்கிறார். எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருக்கிறது. திமுக மதச்சார்பற்ற கட்சி எனச் சொல்லி மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதால் மதங்களைத் தாக்கி பேசும் தவறான பாதையில் செல்கிறார்கள்.
எந்த மதத்திற்கும் நடுநிலையோடு செய்ய வேண்டும் என்பது தான் கட்சிகளின் கடமை. அதை திமுக செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் ஆட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டப்படும்” எனக் கூறினார்.