தமிழ்நாடு தன்னுரிமை கழகம் எனும் புதிய கட்சியை துவங்கியுள்ள பழ.கருப்பையா நிகழ்ச்சி மேடையில் பேசுகையில்,
கடலுக்குள் பேனா நட்டு அவருடைய தகப்பனாரின் பெயரையும், புகழையும் நிலைநாட்டி அதன் வழியாகத் தான் தொடர்ந்து ஆள வேண்டும் என விரும்புகிறார் ஸ்டாலின். இது மீனுக்கு இடைஞ்சல், மீனவர்களுக்கு இடைஞ்சல், கடலுக்கு இடைஞ்சல், சுற்றுப்புறத்திற்கு இடைஞ்சல். நான் சொல்லுகிறேன், நீங்கள் கேட்க மாட்டீர்கள். மக்கள் கொடுத்த வரி பணம் இருக்கிறது என்று கலைஞருக்காக 78 கோடி செலவழிப்பீர்கள். இது உங்களுடைய சொந்தப் பணம் இல்லை. சொந்த பணத்தை வைத்து செய்தால் நாங்கள் கேட்க மாட்டோம். ஒன்றை மட்டும் சொல்லுகின்றேன். வீராணம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. வீரநாராயண சோழன் என்கின்ற ஒரு மன்னன் தன்னுடைய பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக கடல் போன்ற ஏரியைக் கட்டி அந்த ஏரிக்கு தன் பெயரைச் சூட்டிக் கொண்டான். அவன் பெயர் இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக அந்த தண்ணீர் தமிழ் மக்களுக்கு பயன்படுகிறது.
கல்லணையை கட்டினான் கரிகாலன். அவன் என்ன கடலுக்குள் போய் சின்னங்களை ஊன்றிக் கொண்டானா? அவனவன் செய்த செயலின் காரணமாக புகழ் வரும். கரிகாலனின் புகழ் அவன் கட்டிய கல்லணையின் வழியாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கின்ற மக்கள் எல்லாம் கரிகாலனின் பெயரை சேர்த்து தான் சொல்கிறார்கள். பென்னிகுயிக் என்ற வெள்ளைக்காரன் முல்லைப் பெரியாறு அணையை தனது சொந்த பணத்தில் கட்டினான். அவனுடைய பெயரையும், புகழையும் அந்த பகுதி மக்கள் தங்களுடைய திருமண பத்திரிகையில் எழுதுகிறார்கள். நம்முடைய வாழ்வு அவனால் வந்த வாழ்வு என்று நன்றி கொண்டாடுகிறார்கள். புகழ் என்பது தானாக வர வேண்டுமே தவிர, நாம் சின்னங்களை ஏற்படுத்துவதன் மூலம் எல்லாம் வர முடியாது'' என்றார்.