அண்ணாமலையின் பொய் பிம்பம் கூடிய விரைவில் உடையும் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைபயணத்தை துவங்கி இருக்கிறார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்த பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகவின் ஓபிசி அணியின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா தனது டுவிட்டரில், “கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும் நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன். ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்” எனத் தெரிவித்துள்ளார்.