ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகரத்தின் அமைப்பை பாண்டிச்சேரி நகரை உருவாக்கிய பிரெஞ்ச் பொறியாளர் குழுதான் உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. தென்னிந்தியாவில் முதல் ரயில் பயணம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1856ஆம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டை வரை இயக்கப்பட்டது. ரயில் இயக்கும் அளவுக்கு அக்காலத்தில் பிரபலமான வணிக நகராக இருந்தது வாலாஜாபேட்டை.
இந்த நகரத்தை நிர்வாகம் செய்ய 1866ஆம் ஆண்டு நகராட்சியாக அறிவித்தனர் ஆங்கிலேய அதிகாரிகள். அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் முதல் நகராட்சி இந்த வாலாஜாபேட்டை. இப்போது இந்த நகராட்சிக்கான வயது 162.
24 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 15 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 6 வார்டுகளிலும், பாஜக, பாமக, சுயேட்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. நகராட்சித் தலைவர் பதவி ஆளுங்கட்சியான திமுகவுக்கு என்பது உறுதியாகியுள்ளது. வெற்றி மாலை சூட்டிக்கொண்டு தமிழ்நாட்டின் முதல் நகராட்சியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்கிற கேள்வி வாலாஜா மக்கள் பலரும் எதிர்நோக்கியுள்ளனர்.
நகர்மன்றத் தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவாக அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். நகர்மன்றத் தலைவர் பதவி திமுக நகர கழக பொறுப்பாளர் தில்லை மனைவி ஹரிணிக்கா? வேறு ஒருவருக்கா என கேள்வி எழுந்தது. உட்கட்சி பிரச்சனை உட்பட சில காரணங்களால் பயந்து போயுள்ள திமுக பிரமுகர்கள் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள வெற்றி பெற்றுள்ள தங்களது குடும்ப பெண்களை சேர்மன் போட்டிக்கே கொண்டுவரவில்லை.
மாவட்டச் செயலாளரும், கதர்த்துறை அமைச்சருமான காந்தி, நகர கழக பொறுப்பாளர் தில்லை மனைவியை ஹரிணியை சேர்மன் வேட்பாளராக்கலாம் என முடிவு செய்து தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளார். முதல் நகராட்சியின் முதன்மை நாற்காலியிலும், துணை நாற்காலியிலும் அமரப்போவது யார் என்பது உறுதியாகிவிட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைத்து தரப்புகளும் காத்துக்கொண்டுள்ளன.