Skip to main content

முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால்கூட தவறில்லை... -ராமதாஸ்

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
ramadoss




கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இல்லை, மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக மாறினால்தான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டும், மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. அதனால் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று தோன்றுகிறது எனவும் கூறியுள்ளார். 


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் நோய் பரவி வரும் வேகம் குறித்த புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, அனைவர் மனதிலும் பதற்றம் பரவுவதை தவிர்க்க முடியாது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்து நடக்குமோ என்ற அச்சத்தில் சென்னைவாசிகள் உறைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி, 40,498 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழக அளவில் 22,333 ஆகவும், சென்னையில் 14,802 ஆகவும் இருந்தது. அதன்பின் கடந்த 12 நாட்களில் மட்டும் தமிழக அளவில் கரோனா தொற்று 82.23% அதிகரித்திருக்கிறது. சென்னையில் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் மே மாத இறுதி வரை ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 12 நாட்களில் இரட்டிப்பாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களாக சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருநாள் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவில்லை என்பது ஒருபுறமிருக்க, அது படிப்படியாக அதிகரித்து நேற்று 1500-ஐ நெருங்கியுள்ளது. இது நிச்சயமாக மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் விஷயம் என்பதில் ஐயமில்லை.


சென்னையில் கடந்த சில நாட்களாக சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும்,  அது குறித்து மக்களிடம் விளக்கி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது அவசியம் ஆகும்.  சென்னையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பை பெற முடியாது, ஒத்துழைப்பை பெறாமல் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அதற்கான பொறுப்புகளில் இருப்பவர்கள் உணர வேண்டும். இது தான் சென்னையில் கரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய  முதன்மை நடவடிக்கையாகும்.

சென்னையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமானால், களநிலைமை என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உதாரணமாக சென்னையில் உத்தேசமாக எவ்வளவு பேருக்கு  கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம்? அவர்களை கண்டறிய சென்னை மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் எத்தகைய அணுகுமுறையை கையாளப் போகின்றன? ஒவ்வொரு நாளும் சென்னையில் எத்தனை பேருக்கு சோதனை நடத்தப்படவிருகிறது? அவ்வாறு சோதனை நடத்தப்பட்டால் எத்தனை நாட்களுக்குள் சென்னையில் கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்? என்பதை  மக்களுக்கு தெரிவித்தால் மட்டும்தான் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதை அரசு உணர வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

சென்னையில் கரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு சோதனை செய்தால் மட்டுமே அடுத்த சில நாட்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வர முடியும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், சென்னையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6000 பேருக்கு மட்டும் தான் கரோனா சோதனைகள் செய்யப்படுவதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கையை அடுத்த சில நாட்களில் 10,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

nakkheeran app



சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு மக்களின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணம் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது, வெளியில் வந்தால் முகக்கவசம் அணிந்து தான் வர வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும், மீண்டும் தொலைக்காட்சி விளம்பரங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அதை பெரும்பான்மையான மக்கள் பொருட்படுத்தாதது மிகவும் வருத்தமளிக்கிறது. சென்னையில் முகக்கவசம் அணியாமல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை அதிக அளவில் பார்க்க முடிகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சென்னையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுவது வாடிக்கையாகி விட்டது. சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டும், மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. அதனால் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று தோன்றுகிறது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இல்லை, மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக மாறினால் தான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதை உணர்ந்து சென்னை மாநகர மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் வெளியில் வந்தால் முகக்கவசம் அணிவதையும், வெளியில் சென்று வந்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவுவதையும் வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.