தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தனியார் ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் அவர் திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதற்கும் அவர் தெரிவித்திருந்த மற்ற கருத்துக்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் மதிமுகவின் 30 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உடன் இருந்தார். கட்சி நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் உளறிக்கொண்டு இருக்கிறார். அவர் ஆளுநர் பதவிக்கே லாயக்கு இல்லை. ஆளுநர் மாளிகையில் அவர் இருப்பதற்கும் லாயக்கில்லை. அவர் பாஜகவின் ஏஜெண்டாகவும் இந்துத்துவா அமைப்புகளுக்கு பிரதிநிதியாக இருக்கலாமே தவிர ஆளுநர் பதவிக்கு ஆர்.என்.ரவி சற்றும் பொருத்தமற்றவர். இதுவரை இந்தியாவில் எந்த ஆளுநரும் இப்படிப்பட்ட தவறுகளை செய்ததில்லை. தவறுகளை ஒன்றன் மேல் ஒன்றாக செய்து கொண்டு கடைசியாக காலாவதியான ஆர்.என்.ரவி காலாவதியைப் பற்றி பேசுகிறார்” எனக் கூறினார்.