ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 8ம் தேதி காலை 42வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் வீதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்று டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் துணிகளை அயன் செய்து கொடுக்கும் கடைக்குச் சென்று துணிகளை அயன் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் உதயகுமார் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த தேர்தலை ஆளும் கட்சியின் பண பலம், அதிகார பலம் கொண்டு சந்தித்து வருகிறது. நாங்கள் சத்தியத்தையும், உண்மையையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம். இதனால் எங்கள் பிரச்சாரம் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசு எத்தனை சுமைகள் வந்தாலும் அதனைத் தாங்கிக் கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்த அரசு. எடப்பாடி வகுத்துக் கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெறும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் இந்த திமுக அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்று 520 திட்டங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மடிக்கணினி திட்டம் கேள்விக்குறியாக இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மடிக்கணினி வழங்குவது தொடர்பாக சாக்கு போக்கு சொல்லி வருகிறார். முதல் தலைமுறையினர் அதிமுகவுக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர் . ஈரோடு நகர் பகுதியில் சொத்து வரி உயர்வு, மின்சார உயர்வு, விலைவாசி உயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பல்வேறு தடைகளை தாண்டி பல்வேறு துரோகங்களை தாண்டி எடப்பாடி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ளார். திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தையும் தாண்டி அதிமுக வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தில் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும், அதிமுக வெற்றி பெறும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு இந்த தேர்தல் ஒரு அச்சாரமாக அமையும்” என்றார்.