காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (22.01.2021) ஈரோட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி, 23ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு சில நிகழ்சிகளில் கலந்துகொண்ட பிறகு ஞாயிற்றுக் கிழமையன்று சுற்றுப்பயணமாக ஈரோடு வருகிறார். காலை 10 மணிக்கு ஊத்துக்குளியிலும், 10.30 மணிக்கு பெருந்துறையிலும் மக்களைச் சந்திக்கிறார். 11 மணிக்கு ஈரோட்டில் உள்ள காமராஜர், சம்பத் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். அவருக்கு மகிளா காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து, 12 மணிக்கு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின் பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். அதன் பின் 12.30 மணி அளவில் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செய்கிறார். பிறகு அங்கு கூடியுள்ள நெசவாளர்களைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார். மாலை 3 மணி அளவில் காங்கேயம் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, 4 மணிக்கு தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்பு அன்றிரவு அங்கேயே தங்குகிறார்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "பேரறிவாளன் விடுதலை குறித்து நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் தங்களை முன்னிலைப்படுத்துவது தவறு எதுவும் இல்லை. அதுபோன்றுதான் புதுச்சேரியிலும் தி.மு.க தங்களை முன்னிலைப்படுத்தி உள்ளது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். 234 தொகுதியிலும் போட்டியிடத்தான் எங்களுக்கு ஆசை. ஆனால், அது சாத்தியமில்லை. ஒவ்வொரு கட்சியினரும் தங்களை முன்னிலைப் படுத்திக்கொண்டு ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறுவதும் தவறு இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடியின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். மனதில் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள் குறை போக்கப்படவில்லை. கடும் குளிரில் அவர்கள் போராடி வருகின்றனர். உற்பத்தியாளர்கள், ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் மோடியின் தாடி மட்டுமே வளர்ந்துள்ளது. வேற எதுவும் வளரவில்லை. அதிருப்தியில் உள்ள மக்கள் ராகுல் வருகையை எதிர்பார்க்கின்றனர். அவரது வருகை தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் போன்று வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டனியின் வெற்றி இருக்கும்.
சசிகலா வருகையால் அரசியலில் மாற்றம் வருமா என்பதை விட அவர் நல்லபடியாகக் குணமடைந்து திரும்ப வரவேண்டும் என்பதே என் ஆசை” இவ்வாறு கூறினார்.
பேட்டியின் போது மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் வக்கீல் சுதா ராமகிருஷ்ணன், ஈரோடு மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.