ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தை, அமலாக்கப் பிரிவும் நீதிமன்ற உத்தரவோடு சிறையில் வாக்குமூலம் பெற்று கைது செய்துள்ளார்கள். அவரை கஸ்டடி விசாரணைக்கு உட்படுத்தவும் தீவிரமாக இருக்கிறது அமலாக்கத்துறை. தன்னிடம் விசாரிக்க வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளிடம், நீங்கள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தானே சி.பி.ஐ. என்னை விசாரித்தது. அப்படி இருக்கும் போது இன்னும் என்னிடம் நீங்கள் விசாரிக்க என்ன இருக்குது? அப்படி என்ன புதுப்புது ஆவணங்களைக் கண்டுபிடித்து இருக்கிறீர்கள் என்று காட்டமாவே கேட்டிருக்கார் ப.சிதம்பரம்.
விசாரணை முடிந்து சிறையில் இருந்து கிளம்பிய அதிகாரிகள், சிறை முகப்பில் காத்திருந்த கார்த்தி சிதம்பரத்தைப் பார்த்து பொருள் பொதிந்த புன்னகையை வீசிவிட்டு சென்றார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏர்செல் மேக்ஸிஸ் நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் ஏற்கனவே முன்ஜாமீன் வாங்கியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். அதை ரத்து செய்யும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறது அதிகாரிகள் டீம். ப.சிதம்பரம் சிறையில் இருக்கும்போதே அவர் மகனான கார்த்திக் சிதம்பரத்தையும் சிறை வைக்க வேண்டும் என்பதுதான் டெல்லியின் திட்டமாக சொல்லப்படுகிறது. அமலாக்கப் பிரிவு வழக்கில் வியாழக்கிழமை அன்று ப.சிதம்பரத்துக்கு 15 நாள் கஸ்டடி கொடுக்கப்பட்டது. இது காங்கிரஸ் தரப்புக்கும், சிதம்பரம் தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.