ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தை பரபரக்க வைத்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லை. வெற்றி என்பதை மட்டுமே இலக்காக கொண்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியிருந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
நேற்று, ஈரோடு கிழக்கு பகுதிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். தேமுதிக சார்பில் அக்கட்சியின் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் விதிப்படி நேற்று மாலையுடன் பிரச்சார நேரம் முடிந்தது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதால் ஈரோடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தொகுதியில் இருந்து வெளியேறாதவர்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் தற்போதுவரை மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக 15 காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து தங்கும் விடுதிகள் திருமண மண்டபங்கள், கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தலும் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏறத்தாழ 796 வழக்குகளை பதிவு செய்துள்ளோம். புகார்களின் அடிப்படையில் சில வழக்குப் பதிவுகளும் விதிமுறைகளின் பேரில் சில வழக்குப் பதிவுகளையும் செய்துள்ளோம். புகார்களை தெரிவிக்க அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வரக்கூடிய புகார்களையும் நாங்கள் விசாரிக்கிறோம். கள்ள ஓட்டுகளை தடுப்பதற்கு பல்வேறு பட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதையும் மீறி புகார்கள் வந்தால் கட்டாயமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.