ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் பகுதியில் அதிமுக எடப்பாடி அணி கழக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 30 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஒரு சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார். அவரது வழிகாட்டுதலின்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுகவினர் அமைதியான முறையில் சந்தித்து வருகின்றனர். எங்கள் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதிமுகவின் எஃகு கோட்டை இத்தொகுதி என நிரூபிப்போம்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் அணி தனித்துப் போட்டியிடுவதால் எங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. திமுக சார்பில் ஏராளமான அமைச்சர்கள் இடைத்தேர்தலில் களம் இறக்கப்படுவது வாடிக்கைதான். அதிமுக தொண்டர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றியை உறுதி செய்வார்கள். எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வருகிறது. சிறந்த வழக்கறிஞர்கள் நியமித்துள்ளோம்; எனவே, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
பாஜக ஆதரவு உள்ளதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி ஏழு வரை நேரம் உள்ளது. எனவே, வேட்பாளர் கூட்டணி கட்சியினர் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அறிவிப்பார். இது ஒரு குருசேத்திரப் போர் உறுதியாக நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.