ஈரோடு மண்டல திமுக., மாநாடு 24ம் தேதி ஈரோடு பெருந்துறை சரளை பகுதியில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாநகர், தந்தை பெரியார் திடலில் முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக துவங்கியது. இரண்டாம் நாளான இன்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுகவினர், லட்சக்கணக்கில் திரண்டனர்.
மாநாட்டையொட்டி மைசூர் அரண்மனையை போன்று பிரமாண்டமான முகப்பும், உட்புறம் இரண்டாவது முகப்பும் கட்சியினரை மட்டுமின்றி பார்வையாளர்களையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட திமுக.,வினர் மாநாட்டை கண்டு ரசித்து வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டும் 435 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்றும், கட்சியினர் பலரும் குடும்பம், குடும்பமாக மாநாட்டிற்கு வருகை தந்து இரவு மாநாட்டு பந்தலிலேயே தங்கி, இரண்டாம் நாளான இன்றும் மாநாட்டை கண்டு ரசித்து வருகின்றனர். முதல்நாளான நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதியின் வயதை நினைவு கூறும் வகையில் 95 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் கொடியேற்றி வைத்தார்.
இரண்டாம் நாளான இன்றும் பல்வேறு தலைப்புகளில் திமுக., தலைவர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினார். எழுச்சி மிகுந்த இந்த உரையை லட்சக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்கள் கேட்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
இடையில் திடீரென செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி ஒழுங்காற்று வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரே எழுதி நிறைவேற்றிய தீர்மான நகலை முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தை வாசிக்க வரும் போது தொண்டர்கள் விண்ணை முட்டும் அளவிற்கு கரகோஷம் எழுப்பினர். தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தப்பிறகு, இதை ஆமோதிக்கும் வகையில் கையை உயர்த்துமாறு தொண்டர்களை ஸ்டாலின் கேட்டு கொண்டார். இதையேற்று தொண்டர்கள் கையை உயர்த்தி, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆமோதித்தனர்.
மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று காலையில் இருந்தே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான வாகனங்களில் திமுக.,வினர் அலை, அலையாய் மாநாட்டு பந்தலை நோக்கி வந்தனர். மாநாட்டு பந்தலில் நடந்த தலைவர்களின் எழுச்சி மிகு உரையை கேட்டு, கரகோஷம் எழுப்பியும், கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களை வாழ்த்தியும் மாநாட்டில் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி மகிழ்ந்தனர்.
மாநாட்டு முகப்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செல்பி எடுத்து அவற்றை வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு மகிழ்ந்தனர். இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் மாநாட்டு நிகழ்வில் வெளியூர்களில் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதால் மாநாடு களை கட்டியது.