தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 முறை தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், வரும் 30-ந்தேதியுடன் அவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே, தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க, சட்டசபையில் நேற்று சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீது சபாநாயகர் ப.தனபால் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் பல்வேறு தொகுதி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய எதிர்க் கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு அந்த சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. தனி அதிகாரிகளின் பதவிக் காலம் மேலும் 6 மாதம் (டிசம்பர் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிர கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்டர் பக்கத்தில்,
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை, தனி அதிகாரிகளே போதும் என்றால் தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்? அஇஅதிமுகவிற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும்? தமிழ்நாடு அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் (ஜனாதிபதி ஆட்சி) ஆட்சியை ஒப்படைக்கலாமே? என கூறியுள்ளார்.