
'திமுக ஆட்சியில் 15 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது' என முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி கருங்கல்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வியாழக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கடந்த 2011 திமுக ஆட்சி முடிந்து செல்லும்போது தமிழகத்தில் முதியோர் ஓய்வு ஊதியத்துக்காக ஆண்டுக்கு ரூ. 1200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்றனர். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிறகு எடப்பாடியார் மேலும் 5 லட்சம் பேரை சேர்த்து 37 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கினார். இதற்காக ஆண்டுக்கு 4200 கோடி நிதி செலவிடப்பட்டது. 2011 வரை திமுக ஆட்சியில் ரூபாய் 500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத்தை ரூபாய் 1500 என உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் எடப்பாடியார் ஒரு லட்சம் பேருக்கு திருமணத்திற்காக தங்கக் காசுகளை வழங்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருமண உதவித்தொகை திட்டம், தாலிக்கு தங்கம் கொண்டு வந்ததே பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காகத் தான். பிளஸ் டூ வரை படித்தால் ரூபாய் 25,000, பட்டம் பயின்றால் ரூபாய் 50,000 என்று அறிவித்தார். தங்கத்தையே பார்க்காத பல ஏழை குடும்பங்கள் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கினார். ஆனால், அதையும் திமுக ஆட்சி நிறுத்திவிட்டது.
இன்று ஏதோ உயர்கல்வி பயில ரூபாய் ஆயிரம் வழங்குவதாகக் கூறுகிறார்கள். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு ஸ்கூட்டி, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உப்பு, லேப்டாப், 2000 மினி கிளினிக்குகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. திமுக தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால், பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வில் விலக்கு, கல்விக்கடன் ரத்து செய்வோம், கேஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள். ஆனால் இதுவரை செய்யவில்லை. திமுக ஆட்சியில் சொல்வார்கள், ஆனால் செய்ய மாட்டார்கள். திட்டங்கள் வரும் ஆனால் வராது என்ற நிலையில் தான் வாக்குறுதிகள் உள்ளன. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. முடக்கப்பட இருந்த இரட்டை இலையை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் மீண்டும் முதல்வராக வருவார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற மக்கள் உதவ வேண்டும்" என்றார்.