Skip to main content

“வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
White statement should be published Wealth insistence

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிற கூற்றை நிரூபிக்கிற வகையில் தமிழகத்தில் 2023 - 24ஆம் நிதியாண்டில் எவ்வளவு பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அதனுடைய மொத்த தொகை என்ன என்பதை மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்கள் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பத்தாண்டுக் கால மத்திய பாஜக ஆட்சியில் எதிர்பார்த்த முதலீடுகள் வராத காரணத்தினாலும், புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படாததினாலும், வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகின்றன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 11,12 ஆகிய தேதிகளில் கோவைக்கு வருகை புரிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முத்ரா கடன் வழங்கியிருப்பது குறித்து ஆதாரமற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.

White statement should be published Wealth insistence

இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது கூற்றின்படி இதுவரை நாடு முழுவதும் 49.5 கோடி வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும், மொத்தம் 29.76 லட்சம் கோடி ரூபாய்க் கடனாக வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.  மேலும் தமிழகத்தில் 5.6 கோடி பேருக்கு ரூபாய் 3 லட்சம் கோடி கடன்  வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியதோடு கோவை மாவட்டத்தில் மட்டும் 20  லட்சம் பேருக்கு ரூபாய் 13 ஆயிரத்து 180 கோடி முத்ரா யோஜனா கடன்  வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டதும் அரங்கத்தில் அமர்ந்திருந்த  சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி  ஏற்பட்டது.

தமிழகத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 8 கோடி பேர் என்று வைத்துக் கொண்டால் அதில் 5.6 கோடி பேருக்குக் கடன் வழங்குவதாகக் கூறியதும், கோவையில் 35 லட்சம் பேர் வசிக்கும்போது, அதில் 20 லட்சம் முத்ரா கடன் வழங்கியதாகக் கூறுவதையும் அங்கே கூடியிருந்த எவராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துணிந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு அவரது அராஜகப்போக்கை மேலும் நிலைநாட்டியுள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொத்த  குடும்பங்களின் எண்ணிக்கை 30 கோடி, 2022 நிலவரப்படி 32 கோடி,  அதேபோல, தமிழகத்தில் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 19 கோடி.

White statement should be published Wealth insistence

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 41.43 லட்சம் பேர்தான் இருக்கிறார்கள். இதில் 20 லட்சம் பேருக்கு முத்ரா கடன் வழங்கியிருப்பதாகக் கூறுவதும், அதேபோல நாடு முழுவதும் 31 கோடி குடியிருப்புகள் இருக்கிற நிலையில் 49.5 கோடி முத்ரா கடன் வழங்கியிருப்பதாகக் கூறியிருப்பதும், ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றுதான் கூறவேண்டும். நிர்மலா சீதாராமன் கூறிய புள்ளிவிவரப்படி இவ்வளவு முத்ரா கடன்கள் வழங்கியிருந்தால் நாட்டில் தொழிற்சாலைகள் பெருகியிருக்கும்,  தொழில்முனைவோர்கள் அதிகரித்திருப்பார்கள், வேலைவாய்ப்பு பெருகியிருக்கும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கும்.

அப்படிப்பட்ட அதிசயம் எதுவும் நிகழாதபோது நிர்மலா சீதாராமனின் கூற்று உண்மைக்குப் புறம்பான, அபத்தமான கருத்து என்பதை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போதே உறுதியாகக் கூறமுடியும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் நிதியமைச்சர் பொறுப்புமிக்க பதவியில் அமர்ந்து  கொண்டு அடிப்படை ஆதாரமே இல்லாமல் பொது மேடையில் அதுவும் தொழில்முனைவோர்கள் அதுவும் கோவை மாநகர தொழில்முனைவோர்கள் கூட்டத்தில் ஒரு புள்ளிவிவர மோசடியை நிகழ்த்தியிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

White statement should be published Wealth insistence

எனவே, கள நிலவரத்திற்கு விரோதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிற கூற்றை நிரூபிக்கிற வகையில் தமிழகத்தில் 2023 - 24ஆம் நிதியாண்டில் எவ்வளவு பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அதனுடைய மொத்த தொகை என்ன என்பதை மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்கள் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அப்படி அவர் வெளியிடத் தவறுவாரானால் தமிழக மக்களை மட்டுமல்ல இந்திய மக்களையும் ஏமாற்றிய அவப்பெயருக்கு அவர் ஆளாக நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்