அதிமுக தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு பிரிவுகளாக செயல்படுகிறது. இரு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது. இருதரப்பும் அதிமுகவை உரிமை கொண்டாடும் நிலையில், தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை நியமித்தும், மாவட்டச் செயலாளர்களை நியமித்தும், கூட்டங்களையும் கூட்டி வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்பு அறிவித்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில், ஈபிஎஸ் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் டிச.27ல் நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுகவின் கட்சிக் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பயன்படுத்தி பன்னீர்செல்வம் கொடுக்கும் அறிவிப்புகளுக்கு எதிராக விளக்கம் கேட்டு ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் ஓ.பி.எஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளர் என அறிவித்துக் கொண்டு தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலக பெயரை கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டும், நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் பொறுப்பு ஈபிஎஸ் வசம் இருப்பதால், ஓபிஎஸ் இது போன்று செயல்படுவது குறித்து சட்டவிளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த நோட்டீஸில், இது போன்ற செயலில் ஓபிஎஸ் தொடர்ந்து ஈடுபட்டால் அதற்கான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.