Skip to main content

‘பழமையான பொருட்களைப் பாதுகாப்பது இந்தியக் குடிமகனின் கடமை’ - உலக மரபு வார விழாவில் வலியுறுத்தல்

Published on 25/11/2024 | Edited on 25/11/2024
duty of every Indian citizen to preserve ancient artifacts

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு ‘தொன்மையைக் காப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. நிகழ்வுக்கு பள்ளித்தலைமை ஆசிரியர் வே.பழனிவேலு தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சௌ.தெய்வீகன் வரவேற்புரை ஆற்றினார்.

தலைமை ஆசிரியர் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கங்கள் குறித்தும் அதில் பங்கெடுக்கும் மாணவர்கள் எவ்வாறு பழமையான பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் அவற்றை அடையாளப்படுத்துவதற்கான பயிற்சியை நமது தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மூலம் பெற்று வருங்கால சமூகத்திற்கு நமது தொன்மத்தை பாதுகாத்து ஒப்படைப்பதற்கான தலையாயப் பணியை நாம் முன்னின்று செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.

தொடர்ந்து, 'தொன்மையை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் பேசும் போது, “இந்திய அளவில் தமிழகம் தொல்லியல் ஆய்வுகளில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு காரணம் தற்போது பொதுமக்களிடையே தொல்லியல் சார்ந்த அதீத ஆர்வம் ஏற்பட்டு இருப்பதுதான். இதற்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் மொழி, வட்டார வழக்கு, பண்பாடு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதோடு, அவற்றை பாதுகாப்பதற்கான அருங்காட்சியகங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சியை அளிப்பதன் மூலமாக தொன்மை வளங்களைப் பாதுகாப்பதற்கு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என நம்புகிறது தமிழ்நாடு அரசு. இவ்வாறு பழமையான சின்னங்களை பாதுகாப்பதில் அரசு மட்டும் நினைத்தால் போதுமானதாக இருக்க முடியாது பொதுமக்களும், இளைஞர்களும் உள்ளூரைச் சார்ந்த உங்களைப் போன்ற மாணவர்களும் நினைத்தால் மட்டுமே இவற்றை பாதுகாத்து வருங்கால சந்ததிக்கு வழங்க முடியும்.

நமது ஊரில் இருக்கும் பெருங்கற்கால, இரும்பு கால சின்னங்களான தாழிகள், இன்னும் பிற பொருட்கள் சிதைக்கப்படுவதாகப் பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது இதற்கு பொதுமக்களாகிய நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். நமது பகுதியைச் சேர்ந்த பழமையான பொருட்களை பாதுகாப்பது இந்திய குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதை உணர்ந்து அனைவரும் பங்காற்ற வேண்டும் அப்பொழுதுதான் தொன்மங்களையும் கடந்த கால வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாத்து வருங்கால சந்ததிக்கு நமது வரலாற்றைப் போதிக்க முடியும்.

நமது அருகாமையில் இருக்கும் பழமையான பொருட்களை அடையாளம் கண்டு உடனடியாக பள்ளிகளில் இருக்கும் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரிடம் தகவலை தெரிவித்து அவற்றை பாதுகாப்பதற்கான முன் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் இதற்கு மாணவச் செல்வங்கள் குறிப்பாக தொன்மை  பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பங்காற்ற வேண்டும்” என்று பேசினார்.

இறுதியாகத் தமிழாசிரியர் செல்வமணி நன்றி கூறினார். வரலாற்று முதுகலை ஆசிரியை அனந்தநாயகி, கணித ஆசிரியை சித்ரா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்