அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் வரும் 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரிக்கும்போது, அதிமுக எம்எல்ஏக்கள் பலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பார். மேலும் தவறு செய்யும் அமைச்சர்களை, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அமைச்சர்களை மாற்றியிருப்பார். நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளனர்.
அதிருப்தியில் உள்ளவர்களை சமாளிக்கவும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் எம்எல்ஏக்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றவும் சில மாற்றங்களை செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். ஆகையால் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில அமைச்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அவர்களை மாற்றவோ அல்லது அவர்களிடம் இருக்கும் சில பொறுப்புகளை சிலரிடம் மாற்றிக்கொடுத்து அமைச்சரவையில் புதியவர்களை சேர்க்கவோ அவர் முடிவு செய்துள்ளார்.
ஆகையால்தான் இன்று மாலை ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அந்த சந்திப்பில் அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை இடம் பெறலாம். இப்படி மாற்றம் செய்யும்போது சிலர் எதிர்க்கக்கூடும், சிலர் தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பார்கள். அவர்களை சமாளிக்கத்தான் 6ஆம் தேதி முக்கிய நிர்வாகிகள் கூட்டம் வைத்துள்ளார் என்கின்றனர்.