தர்மபுரி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தராமல் தனித்து களமிறங்கியுள்ளது தே.மு.தி.க. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ சம்பத்குமார், அமைச்சர் அன்பழகனிடம் சென்று, உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரியை நம்முடையதாக காட்டவேண்டும் என்ற கட்சித் தலைமையின் கனவு இருக்கும்போது, "தே.மு.தி.க. புல்லட் மாரி முத்து அதை செய்யவிடாமல் வாக்கு வங்கிகளை பிரிக்கும் வேலையை செய்து வருகிறார். அவரை நீங்கள் அழைத்து பேசவேண்டும். அப்படி இல்லை என்றால் தர்மபுரி உள்ளாட்சித் தேர்தலில் கட்சித் தலைமையின் கனவு பலிக்காது'' என நொந்து பேசியுள்ளார். அமைச்சரும் செய்வதறியாது கையை பிசைந்து வருகிறார்.
இந்த விவகாரம் தர்மபுரியில் பரபரப்பாகி வரும் நிலையில், இது தொடர்பாக நம்மிடையே பேசிய தே.மு.தி.க. கிழக்கு மாநில கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து, "தர்மபுரியை பொறுத்தவரை கட்சியில் அட்வான்ஸ் புக்கிங்காகத்தான் எல்லாம் நடந்துள்ளது. கூட்டணிக்கு எந்த தர்மமும் அவர்கள் காட்டவில்லை. நாங்கள் எந்த பகுதியிலெல்லாம் வாக்கு அதிகமாக வாங்கினோமோ அதை அவர்களே எடுத்துக்கொண்டு, அவர்கள் தோற்கும் இடங்களை எங்களுக்கு கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? அதனால், நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறோம்''’என்றார். ஆனால், அமைச்சர் அன்பழகனிடம் இதுகுறித்து பேசியபோது, "நாங்கள் தலைமை சொல்லுவதை செய்துவருகிறோம். அவர்கள் தேவையற்ற விசயத்தையெல்லாம் பேசிவருகிறார்கள். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று முடித்துக்கொண்டார்.
தர்மபுரி அ.தி.மு.க.வினர் வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, "தர்மபுரியை தனக்கான தொகுதியாக மாற்றி அமைத்து, கொங்கு பெல்ட்டை நீட்டிக்க வேண்டும். மேலும், வன்னியர்களின் வாக்கை அ.தி.மு.க. வாக்காக மாற்ற வேண்டும். அப்படிச்செய்வதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அது உதவும் என்று எடப்பாடி திட்டம் போட்டிருக்கிறார். அவரின் கனவை கானல் நீராக மாற்றும் நிலையில் தேர்தல் கள நிலவரம் இருப்பதால், இவை அனைத்தும் தி.மு.க.விற்கு சாதகமாக போய்விடும் என்பதை அறிந்து, ஆத்திரம் அடைந்திருக்கிறார் எடப்பாடி. தனது கோபத்தை அமைச்சரிடத்திலும் வெளிப்படுத்தி, அங்கு என்னதான் நடக்குது?'என்று ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார் என்கிறார்கள்.