Skip to main content

அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க, ஏன் பிரச்சினை பண்ணுறீங்க... அமைச்சரால் கோபமான எடப்பாடி... அதிருப்தியான நிர்வாகிகள்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

கடலூர் மாவட்டத்துக்கான நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 11-ஆம் தேதியன்று மாலை 7 மணியளவில் சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் தரப்பிற்கும், அவரை எதிர்க்கின்ற நிர்வாகிகளுக்குமான கருத்து முரண்பாடுகள் கைகலப்புவரை சென்றது கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் மற்ற முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இன்னும் சில மாதங்களில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கின்ற சூழ்நிலையில் ஊரகப்பகுதிகளுக்கான தேர்தலில் தோல்வி கிடைத்ததைப்போல நிகழ்ந்து விடாமலிருப்பதற்காகவும், நிர்வாகிகளுக்குள் நிலவுகின்ற முரண்பாடுகளைக்களையவும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 10, 11 தேதிகளில் தலைமைக் கழகத்தில் மாவட்டவாரியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசி கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
 

admk



கடலூர் மாவட்டத்தின் கிழக்கு, மேற்கு, மத்தி என மூன்று மாவட்ட நிர்வாகிகள் ஒரே சமயத்தில் தனித்தனி குழுவாக அமரவைக்கப்பட்டனர். கடந்த எம்.பி. தேர்தல் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல்களில் எதிர்க்கட்சி வெற்றிபெற்றதைப் போலல்லாமல் விரைவில் நடக்கக்கூடிய நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலிலும், 2021 பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. பெருவாரியாக வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கேட்டுக் கொண்டார்.

முதலில் பேசிய வடலூர் பேரூராட்சி செயலாளர் பாபு, "கடந்த 20 வருடமாக வடலூர் பேரூராட்சியை நம்மால் பிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதிக்கம்தான். இப்போதாவது பிடிக்கலாம் என்கிற முனைப்பில் சொந்த செலவில் கட்சிப் பணிகளை செய்துவருகிறேன். அமைச்சர் சம்பத் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இடையூறாக இல்லாமல் இருந்தால் போதும். சம்பத்தோ, "அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க, ஏன் தேவையில்லாம பிரச்சினை பண்ணுறீங்க...' என்று எதிர்க்கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார். நான் என்ன தி.மு.கவிலா இருக்கிறேன். அவர்களுடன் எப்படி அட்ஜஸ்ட் பண்ணிப் போவது?''’என்று கூறி அமர்ந்தார்.

அதற்கு சம்பத்தின் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் எழுந்து, "டீ கிளாஸ் கழுவிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பாபுவை நகரச்செயலாளராக வளர்த்துவிட்டது அமைச்சர்தான். அவரைப் பற்றியே குறை சொல்கிறாயா..?'' என எகிற... அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் பழனிச்சாமி, ‘தனிப்பட்ட விஷயமெல்லாம் பேசாத, வெளியில போய்யா...' என ஒருமையில் பேசியுள்ளார்.
 

admk



அப்போது மாநில அமைப்புச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் எழுந்து, "கண்ட கண்ட நாயெல்லாம் எழுந்து, எதிர்த்துப் பேசுது. அமைச்சர் சம்பத், கோஷ்டி அரசியலை வளர்த்துவிடுகிறார்''’என குற்றம்சாட்ட... அதற்கு சம்பத், "அப்படியெல்லாம் கோஷ்டி அரசியல் பண்ணவில்லை''’என்று மறுத்துப் பேசியுள்ளார். அப்போது சமுட்டிக்குப்பம் சுப்பிரமணியனும் மாணவரணிச் செயலாளர் கலையரசனும், "அமைச்சரையே எதிர்த்துப் பேசுறீங்களா''…என்று எகிற... சொரத்தூர் ராஜேந்திரன் ஆவேசமாக கலையரசனை நெட்டித் தள்ள, அப்போது அவர் அருகிலிருந்த அமைச்சர் சம்பத் மீது சாய, சம்பத் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.


அதைப்பார்த்து எதிரிலமர்ந்திருந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் விரைந்துவந்து இரு தரப்பையும் சமரசம் செய்தனர். அதற்குப்பிறகு பேசியவர்கள், அமைச்சரின் கோஷ்டி அரசியலால் குறிஞ்சிப்பாடி தொகுதியில் கட்சி வேலை பார்க்க முடியவில்லை. கட்சியின் அமைப்புச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் பெயரில்லாமல் விளம்பரம் செய்கிறார்கள். சம்பத்தின் பையனை முன்னிலைப் படுத்துகிறார்கள். கோஷ்டிப் பூசலால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று ஒன்றியச் செயலாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்'' என்று கூறியுள்ளனர்.

அதன்பின்னர் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள் சார்பாக ஒருசிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர். நல்லூர் ஒன்றியச் செயலாளர் பச்சமுத்து பேசும்போது, "விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் பற்றி குறை கூறிப் பேசினார். கலைச்செல்வனோ சம்பத் மீது குறை கூறினார்.


மேற்கு மாவட்டச் செயலாளர் அருண் மொழித்தேவன் பேசும்போது, “அமைச்சர் சம்பத்தால் மாவட்டத்தில் எந்த நல்ல பணியும் நடக்கவில்லை, மக்களுக்கும் எதுவும் செய்ய வில்லையென்றால் 2021-ல் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளையும் எப்படிப் பிடிக்க முடியும்..?'' என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அள்ளிவீசினார். அவரைப்போலவே எம்.எல். ஏ.க்கள் சிதம்பரம் பாண்டியன், பண்ருட்டி சத்யா, காட்டுமன்னார்குடி முருகுமாறன் ஆகியோரும், கட்சி நிர்வாகிகளும் சம்பத்தை குறைசொல்லியே பேசியுள்ளனர்.

இவற்றிற்குப் பிறகு பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், "வருகின்ற பேரூராட்சி, நகராட்சி தேர்தல்களில் வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகளையும், கடலூர், நெல்லிக்குப்பம் நகராட்சிகளையும் அ.தி.மு.க. அணி கைப்பற்றுகிற அளவில் என்னுடைய செயல்பாடுகள் இருக்கும்''’என்று கூறியுள்ளார்.

முடிவாக எடப்பாடி பழனிச்சாமி, "பட்ஜெட்டுக்குப் பிறகு அனைவரும் ஒற்றுமையாக வந்து என்னை சந்திக்கவேண்டும். வேறு ஏதாவது பிரச்சனையென்றால் கடுமையான நடவடிக்கை இருக்கும்''’என்று எச்சரித்துள்ளார். கடலூர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக கட்சியினர் புகார் பட்டியல் வாசிக்கும் கூட்டமாக முடிந்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்