Skip to main content

கருப்பு சட்டையில் என்ட்ரி கொடுத்த இபிஎஸ்; பரபரப்பான சட்டமன்றம்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

eps entry tamilnadu Assembly  black shirt

 

2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்,  ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல்நாள் ஆளுநரின் தொடர் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சட்டமன்றத்தில் இருக்கும் திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள், ஆளுநருக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு கண்டன கோஷங்களை எழுப்பி வந்தனர். ஆளுநர் படிக்கும்போது, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளைப் புறக்கணித்தார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். அதேசமயம் எதிர்க்கட்சியின் வரிசையில் அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு அருகருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு இபிஎஸ் அணி தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பல்வேறு முட்டல் மோதல்கள் நீடித்து வரும் நிலையில், அதிமுக என்ற பெரிய கட்சி மூன்று அணிகளாகப் பிரிந்து இருக்கின்றது. ஒருபுறம் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், மறுபுறம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ்ஸும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதில், கட்சியிலேயே இல்லாத சசிகலா நான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் கூறி வருகிறார்.

 

இந்தச் சூழலில், கடந்த 2022 அக்டோபர் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு-வுக்கு எடப்பாடி பழனிசாமி சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது. அதுமட்டுமல்லாமல், எனக்கு பக்கத்தில் ஓபிஎஸ் உட்காரக்கூடாது என சட்டமன்றத்தில் கூச்சலிட்டார். மேலும், ஒரு சாதாரண இருக்கைக்காக சட்டமன்றமே அதகளமானது.

 

ஆனால், சட்டமன்ற இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்தார். இதனால், விரக்தியடைந்த  எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வராமல் வெளிநடப்பு செய்தார். மேலும், எடப்பாடியின் கடிதம் குறித்து அப்பாவு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காமலேயே இருந்தார்.

 

அதேபோல் இரண்டாம் நாளாக சட்டமன்றம் நேற்று கூடிய நிலையில் அன்றும் ஓபிஎஸ் - இபிஎஸ் அருகருகே அமர்ந்திருந்தனர்.  இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. மேலும், இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை நேற்று  சந்தித்து மனு கொடுத்துள்ளனர். 

 

இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி, ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடமாற்றம் ஆகியவை குறித்து சபாநாயகர் முடிவு எடுக்காததால் அதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இபிஸ் அணியினர் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்