![Vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/gp43EJ_ELb3bCrDWuF4G02KUFxdaOEdmh2eFuUnYCiA/1589545701/sites/default/files/inline-images/vijayakanth_28.jpg)
பள்ளி, கல்லூரி மாணவிகள், பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள், குடும்பப் பெண்கள் போன்றோரை நாசப்படுத்திய நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசிக்கு, ''பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர், தாங்கள் யாரும் அந்த குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டோம் என சொன்னது போல நாகர்கோவிலும் வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும்'' என்றும், ''பெண்கள் விஷயத்தில் இதுபோன்று நடந்து கொள்பவர்களை தெலங்கானாவில் நடந்ததுபோல என்கவுண்டர்தான் இதற்கு ஒரே வழி, அப்படி நடந்தால்தான் இனிமேல் இதுபோன்ற சம்வங்கள் நடக்காது'' என சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதைத்தான் நக்கீரனும் வெளிப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் காசிக்கு ஆஜராக மாட்டர்கள் என தெரிவித்துக்கொள்கிறேன்'' என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் தெரிவித்தார். நாகர்கோவில் வழக்கறிஞர்களின் முடிவை பல்வேறு தரப்பினர் வரவேற்று வருகின்றனர்.
பெண்கள் மோசடி மன்னன் காசி தொடர்பான வழக்கில் யாரும் ஆஜராகக் கூடாது என்ற நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கத் தலைவரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்கின்ற காசி தொடர்பான வழக்கில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது என்று நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஷ் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோன்று பெண்களை ஏமாற்றி அவர்கள் வாழ்க்கையில் விளையாடும் கயவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் காசிக்கு கடும் தண்டனை வழங்கி, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வுகள் நடக்காத வண்ணம் அந்த தண்டனை மிகக் கடுமையானதாக இருக்கவேண்டும். மேலும், ஒட்டு மொத்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த இந்த முடிவை தேமுதிக சார்பில் வரவேற்பதோடு, அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வழக்கறிஞர்கள் இதே உறுதியோடு இருந்தால் தமிழகம் எங்குமே இதுபோன்ற கொடிய செயல்கள் நடக்காத வண்ணம் பலவகையான செயல்களை தடுக்கமுடியும் என்று நம்புகிறேன்.
![nagercoil kasi](http://image.nakkheeran.in/cdn/farfuture/d4JMj7HRIZ0Ao9ddgVvL2DiBrRXNbWwv_Itd7QHsgRI/1589546116/sites/default/files/inline-images/480_4.jpg)
அதேநேரத்தில், பெண்களும் பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப், போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாறக்கூடாது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழிக்கு ஏற்ப போலியானவர்களை கவனமாக கண்டறிந்தால் மட்டுமே பெண்கள் தங்கள் வாழ்க்கையை தற்காத்துக் கொள்ள முடியும். மேலும், போக்சோ சட்டத்தின்கீழ் பெண்கள் மோசடி மன்னன் காசியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.