அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிசோடியாவை 4 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து மணீஷ் சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பிலிருந்து மணீஷ் சிசோடியாவை விசாரிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என முறையிடப்பட்டது. இதனிடையே மணீஷ் சிசோடியாவும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ காவல் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின் மணீஷ் சிசோடியா டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று மணீஷ் சிசோடியாவிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் முடிவு செய்து இருந்தனர். அதன்படி அமலாக்கத் துறையினர் திகார் சிறைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக அறிவித்துள்ளது அமலாக்கத்துறை. விசாரணைக்கு மணீஷ் சிசோடியா ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.