தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துவருகின்றார். சமீபத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி, நிர்வகிக்கும் மின்வாரியத்தில் அதிக அளவில் ஊழல் நடப்பதாகவும், நான்கு மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சி செய்வதாகவும், அது தொடர்பான ஆவணங்களை வெளியிடத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்தின் மொத்த தேவையில் 1.04 சதவீதம்தான் இந்திய அரசின் மின் சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதால் கொள்முதல் அவசியமானதாக உள்ளது.
ஆனால் அதிக அளவில் வெளிச் சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதில் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.