வாக்களிக்க வெளியூர் செல்லும் மக்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை. தமிழக அரசின் அலட்சியப்போக்கிற்கு கண்டனம் தெரிவிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னையில் இருந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்கான பேருந்து வசதிகளை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், வெளியூர்களுக்கு செல்வதற்காக நேற்று மாலை கோயம்பேடு சென்றவர்களுக்கு கூட காலை 8 மணி வரை பேருந்து கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பேருந்துகள் இருந்தும் வேண்டுமென்றே பேருந்துகளை இயக்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்தியுள்ளனர். அதுகுறித்து கேள்விகேட்ட பயணிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். பல மணி நேரங்களுக்கு பிறகுதான் திருச்சி சர்க்கிள் பேருந்துகளே இயக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதுவும் போதுமான அளவில் இயக்கப்படாததால் மக்கள் பேருந்தின் கூறை மீது அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செல்வதை காணமுடிகிறது. இதுவல்லாமல் மதுரை, தேனி, நெல்லை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்துகள் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்துள்ளனர்.
அரசுக்கு எதிரான மனநிலையில் பெரும்பாலான மக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், எதிர்ப்பு வாக்குகளை குறைக்க இந்த அலட்சியப் போக்கு திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. எனினும் பொதுமக்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற அரசு போதிய வசதிகளை செய்து கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.