‘தமிழக மக்கள் விரோத பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்று நம்பியிருந்தேன். ஏமாந்துபோனேன்.’ என்று சிவகாசியைச் சேர்ந்த அதிமுக சிறுபான்மையினர் பிரிவில் உள்ள சையது சுல்தான் இப்ராஹிம் என்பவர், வலைத்தளத்தில் தனது குமுறலை கீழ்க்கண்டவாறு வெளியிட்டிருக்கிறார்.
கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பாஜக கூட்டணியை, நான் மட்டுமின்றி ஈவு இரக்கம் அன்பு கனிவு மனிதநேயம் மனம் படைத்த யாரும் தமிழகத்தில் ஆதரிக்க மாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியால் தமிழகத்தில் எந்தவிதமான பயன்பாடுகளும் இல்லை.
1000, 500 ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து விட்டனர். அதனால், நேரிடையாக பாதிக்கப்பட்ட மக்களில் நானும் ஒருவன்.
ஜிஎஸ்டி எனும் வரிவிதிப்பால், நடுத்தர சிறு குறு தொழில் அனைத்தும் நாசமடைந்தது. நான்கு ஆண்டுகளில் நானே எனது வியாபாரத்தை தக்க வைக்க கடுமையான போராட்டம் நடத்தி வருகிறேன். நான் வாங்கிய வீட்டையும் விற்று விட்டுத்தான் தற்போது வியாபாரம் செய்து வருகிறேன். என்போன்று பா.ஜ.க. ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமாக உள்ளனர். இதுதான் எதார்த்த நிலை. இனிவரும் காலங்களில் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அந்த வகையில்தான், இனி இந்தியாவில் சிறு குறு நடுத்தர ஏழை எளிய மக்கள் வாழ முடியும் என்ற நிலையில், பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வு விண்ணைத்தாண்டிப் பறக்கிறது.
சுதந்திரம் அடைந்த பிறகு சிவகாசியில் துவங்கப்பட பட்டாசு உற்பத்தி தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நயவஞ்சகத்தால் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நலிவடைந்த நிலையில் உள்ளது. இங்கே அனைத்து தரப்பினரும் தினம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய நிலை. இப்படி ஏராளமான காரணங்கள் உள்ளன. இந்தத் தேர்தலில் மக்கள் பாஜக வை முற்றிலும் புறக்கணிக்கும் மனநிலையில் இருக்கும்போது, கொள்கை சார்ந்து நான் சார்ந்த இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹ்அருளிய ஷரியத் சட்டத்தில் கை வைத்து, எங்களது சமய நம்பிக்கையினை தனது காலில் போட்டு மிதிக்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் இதர சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை இந்து சமய மக்களின் நலனுக்காக, எந்த வகையான நல்ல திட்டங்களையும் தந்திடாத பாஜகவுடன் நேரிடையாகவும் மறைமுகமாகவும் என்னால் பணியாற்ற முடியாது என்ற ஒரே ஒரு காரணத்தால், நான் மிகவும் விரும்பும் அஇஅதிமுக வில் இருந்து விடுபடுகிறேன். ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் ரத்தம் குடிக்க துடிக்கும் பாஜக வுடன் கூட்டணி என்பதால் மனது வலிக்கிறது. மனம் ஏற்க மறுக்கிறது. வருத்தத்துடன் விடை பெறுகிறேன்.
சையது சுல்தான் இப்ராஹிமின் இந்த வலைத்தளப் பதிவை, எதிரணியினர் வாட்ஸப்பில் பரப்பிவிட, விருதுநகர் தொகுதி தகித்தது. நாம் அவரைத் தொடர்புகொண்டபோது, “ஆமாம். நான் என் கருத்தை வெளியிட்டதும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் என்னை அழைத்துப் பேசினார்கள். இதுஒன்றும் கொள்கை சார்ந்த கூட்டணி இல்லை. வெறும் தேர்தல் கூட்டணிதான். கட்சிப் பணியாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். அதனால், பா.ஜ.க.வுக்கு எதிராக நான் போட்ட பதிவுகள் அனைத்தையும் அழித்துவிட்டேன்.” என்றார்.
தனது பக்கத்தில் சையது சுல்தான் இப்ராஹிம் அழித்துவிட்டாலும், விதவிதமாக அவர் வெளிப்படுத்திய பா.ஜ.க. எதிர்ப்பு பதிவுகளைப் பலரும் அப்போதே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டனர். அவற்றை இப்போது பரப்பி வருகின்றனர்.
சையது சுல்தான் இப்ராஹிமிடம் லோக்கல் செய்தியாளர் ஒருவர் போன் போட்டு ‘சரி, கட்சியில் திரும்பவும் சேர்ந்துட்டீங்க. இந்த விருதுநகர் தொகுதியில் ஒருவேளை பா.ஜ.க. போட்டியிட்டால், தாமரைக்கு வாக்களிப்பீர்களா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் “என்னுடைய சின்னம் இரட்டை இலை” என்று சொல்லி, லைனைக் கட் செய்திருக்கிறார்.
வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு அரசியல் தலைவர்கள் கொள்கையில்லா கூட்டணி வைத்துவிடுகிறார்கள். கட்சித் தலைமையின் முடிவை அப்படியே ஏற்று, கொள்கையைத் தூக்கி எறிய முடியாமல் பரிதவிப்பது என்னவோ தொண்டர்கள்தான்!