Skip to main content

“ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?” - இபிஎஸ் கண்டனம்

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
Edappadi palaniswamy Condemnation and questioned Even if it's the ATGP, the answer is intimidation?

ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்” என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது. தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது , இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப்படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, முதல்வர் ஸ்டாலின் தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். 

ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசு உறுதிசெய்ய வேண்டும். உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்