நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் பகுதியில் பிறகட்சியினர் அதிமுகவில் இணையும் இணைப்புவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுவரை 52 லட்சம் மாணவர்களுக்கு 12 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தபோதும் அவர் மறைந்த பின்னும் நாங்கள் தொடர்ந்து கொடுத்தோம். கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க அரசின் சார்பாக மடிக்கணினி வழங்கப்பட்டது. அதையும் கைவிட்டுட்டாங்க. அதிமுக எதை எல்லாம் கொண்டு வந்ததோ அதை எல்லாம் திமுக கைவிட்டுவிட்டது.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்கின்ற பொழுது கடுமையான வறட்சி குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்தேன். தமிழகம் முழுவதும் வறட்சி. அப்படிப்பட்ட வறட்சிக்காலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்கினோம். அதன் பின் கஜா புயல். அதனால் ஏற்பட்ட வெள்ளம். டெல்டா மாவட்டம் முழுவதும் கடுமையான சேதம். அதை சீர் செய்தது அதிமுக” என கூறினார்.