ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கடந்த முறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது நேரடியாக அதிமுகவே போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர் குறித்து முன்னாள் அமைச்சர்களுடன் பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தாங்களும் போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்து, கூட்டணி கட்சிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இருதரப்பும் அதிமுக சார்பில் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும், அல்லது சின்னம் முடக்கப்பட்டு சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு அமையுமா என்ற சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தின் மகேஸ்வரி தினேஷ் அமர்விடம் பழனிசாமி தரப்பு முறையிட்டுள்ளது. இடைத்தேர்தலில் எங்கள் சார்பாக தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பப்படும் வேட்பாளரின் பெயரைத் தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என பழனிசாமி தரப்பில் முன்வைத்தது. இந்த கோரிக்கையை பன்னீர்செல்வம் தரப்பிற்கு தெரிவித்து விட்டீர்களா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, அதனை அவர்களுடன் பகிர்ந்து கொண்டோம் என கூறியுள்ளனர்.
மேலும் இடைக்காலப் பொதுச் செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளீர்கள். இந்தநிலையில் இடைத்தேர்தலும் வந்துள்ளது. அதனால் எங்களது சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் தேவைப்படுகிறது. அத்தோடு இடைக்கால பொதுச் செயலாளர் என்று கையொப்பமிட்ட வேட்பாளரையும் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் உங்களிடமிருந்து சில உத்தரவுகளை எதிர்பார்க்கிறோம் என பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்தையும் கேட்டுக்கொண்ட மகேஸ்வரி தினேஷ் அமர்வு வரும் 30 ஆம் தேதி முறையீடு செய்யுமாறு தெரிவித்துள்ளது.