குடியுரிமை திருத்த சட்ட த்திற்கு எதிராக நாடு முழவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது. தமிழகத்திலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (26.02.2020) மாலை குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருணன் தலைமை தாங்கினார். மற்றொரு மாநில ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் வரவேற்புரை வழங்கினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்து குழும தலைவர் என்.ராம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ஆன்மிக தலைவர் பாலபிரஜாபதி அடிகள் வாழ்த்துரை வழங்கினார். மேலும், திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.