மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் மகா யுதி கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்தித்தது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், நேற்று (23-11-24) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க 132 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகா யுதி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் படுதோல்வியைச் சந்தித்துள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வாக்குப்பதிவு எந்திர மோசடி காரணமாகவே தாங்கள் தோல்வி அடைந்ததாகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று அதற்கு நேர் எதிரான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேட்டியளித்த அவர், “2004 ஆம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி நடத்தப்பட்டு வரும் தேர்தல்களில் நான் பங்கேற்று வருகிறேன். இந்த விஷயத்தில், தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த மோசமான அனுபவமும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு அல்லது தில்லுமுல்லு நடந்துள்ளதா? என்பதை நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறன் குறித்து எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.