நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
இதனிடையே, ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கே நேற்று (13-02-24) தமிழகம் வந்தார். மேலும், அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர்களில் ஒருவரான சிரிவெல்ல பிரசாத் உடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (14-02-24) ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அண்மையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.