கடந்த 6 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தபடி நேற்று (8/1/2022) நீட் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளான 07/01/2022 அன்று மாலை 05.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம், ”அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை தெரிவிப்பார்” என தெரிவித்திருந்தார்.
அதன்படி 8 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். மேலும், செய்தியாளர்களைச் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன், ''நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் பாஜக சார்பில் கலந்துகொண்டு எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்தேன். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் எங்களுக்கு (பாஜக) உடன்பாடு இல்லை. ஒன்றிய அரசால் மாநில அரசின் மீது திணிக்கப்பட்டது நீட் தேர்வு என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இந்த நீட் தேர்வு வந்த வரலாறு பலமுறை ஆண்டுக்கணக்காக இங்கு விவாதிக்கப்பட்ட ஒன்று. இது ஏதோ பாஜக செயல்திட்டத்தின் கீழ் உருவான தேர்வு இல்லை. காங்கிரஸ் - திமுக கூட்டணியில்தான் கொண்டுவரப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் நாடுமுழுவதும் நீட் தேர்வு நடக்கிறது. சமூக நீதிக்கு எதிராக நீட் தேர்வு இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவும் நூறு சதவிகிதம் உண்மைக்குப் புறம்பானது. அதிலும் எங்களுக்கு ஏற்பு இல்லை'' என்றார்.
இந்த கூட்டத்தில் பாஜகவை தவிர சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 12 கட்சிகளின் ஒப்புதலுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ”கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு, வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு சாதகமானது. நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது சட்டமன்றத்தின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது தமிழக ஆளுநரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் நீட் விவகாரம், தமிழகத்தின் அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.