Skip to main content

எதையும் சொல்ல முடியாமல் என்னைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
 

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பத்தில் பேசுகையில், 
 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி மேல் அவ்வளவு வெறி. நாங்களா வேண்டாம் என்கிறோம். இங்கு உள்ள மக்கள் கொடுத்தால் அழகா போய் உட்காருங்கள். ஜெயலலிதாவுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு விவசாயி அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கின்றேன். உங்களைப்போன்று பதவிக்காக நாங்கள் திரியவில்லை. சாதாரண விவசாயிக் கூட முதலமைச்சராக வர முடியும் என்கிற நிலைப்பாட்டில் உள்ள ஒரே கட்சி அதிமுக. இந்த இயக்கத்தில் கடுமையாக உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் என்னைப்போல் முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. திமுகவில் இது முடியுமா? இந்த தொகுதியில் போட்டியிடுவது யார்? ஒரு வாரிசுதானே போட்டியிடுகிறார். இதேபோல் பல நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்கள் வாரிசுகள்தான். 

 

eps


 

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா பொறுப்பேற்று முதலமைச்சராக பணியாற்றினார். அதற்கு பிறகு நாங்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உதவியோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். திமுகவில் இது முடியுமா? ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி புறப்பட்டுவிட்டார். திமுகவில் உழைத்தவர்கள் இல்லையா? திமுகவில் உழைத்தவர்களில் ஒருவர் கூட கண்ணுக்கு தெரியாதா? சிறைக்கு சென்றவர்கள் இல்லையா? நாட்டுக்கு உழைத்தவர்கள் எத்தனையோ தலைவர்கள் இருக்கின்றபொழுது ஏன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய துடிக்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்திலேயே உதயநிதிக்கு புகழ்பாடிக்கொண்டிருப்பதை பார்த்தோம். அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம். யார் உழைக்கிறார்களோ அவர்கள் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். 
 

தமிழகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டு அதில் முதல்கட்டமாக ரூ.600 கோடியிலான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஏரி குளங்களை குடிமராமத்து செய்ய முதல் கட்டமாக ரூ.100 கோடியில் 1,519 ஏரிகள் தூர் எடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ரூ.328 கோடியில் 1,511 ஏரிகளில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது ரூ.500 கோடியில் 1,829 ஏரிகள் தூர் எடுக்கப்பட்டு விவசாயிகளை கொண்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு எடுக்கப்படும் வண்டல் மண் விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. நாம் விவசாயம் செய்வதை பார்த்ததும் மு.க.ஸ்டாலின் குளத்தில் இறங்கினார். 2 குளங்களில் மண்ணை அள்ளி சீன் போட்டு சென்றுவிட்டார். 
 

100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டு விடும் என்று பொய் பிரசாரம் செய்தார்கள். 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படாது, தொடர்ந்து வேலை வழங்கப்படும். விவசாயத்தின் உபதொழிலாக கால்நடை வளர்க்கப்படுகிறது, அதனால்தான் கோழி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பசுமை புரட்சி வெண்மை புரட்சி ஏற்படுத்த கறவை மாடுகள் வழங்கப்பட்டது. பெண்கள் சொந்த காலில் நிற்பதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது. இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் விவசாயி கிடையாது, நான் விவசாயி என்பதை சொல்லிக் கொள்வதை பெருமையாக கருதுகிறேன். 


 

ஸ்டாலின் கடந்த தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றார். நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று கடனை தள்ளுபடி செய்ய இது பொதுத்தேர்தல் அல்ல. இதில் எப்படி நீங்கள் முழு வெற்றி பெற முடியும். கடந்த தேர்தலில் 13 சட்டமன்ற தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். 9 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றோம், நமக்கு கிடைத்தது தர்மத்தின் வெற்றி. அவர்கள் உண்மையைச் சொல்லி இருந்தால் ஒரு இடம் கூட கிடைத்திருக்காது. விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் தருவதாக அறிவித்தார். அவர்களால் எப்படி ஆட்சியில் இல்லாமல் கொடுக்க முடியும். கல்விக்கடனையும் ரத்து செய்வோம் என்று பொய் சொல்லி வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்கள் மத்தியிலும் ஆட்சிக்கு வர முடியவில்லை, மாநிலத்திலும் முடியவில்லை.
 

இப்போது என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள். எதையும் சொல்ல முடியாமல் என்னைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மிக்சி, கிரைண்டர் கொடுத்தோம். ஜெயலலிதா மாணவர்களுக்கு காலணி, சீருடை, சைக்கிள், மடிக்கணினி வழங்கினார். தி.மு.க. ஆட்சியில் என்ன கிடைத்தது. நாங்கள் 76 அரசு கலை கல்லூரிகள் கொண்டு வந்துள்ளோம். இதில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்று வருகிறார்கள்.
 

கிராமங்களில் ஏழை மக்களுக்கு பசுமை வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கருத்தரிக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட ரூ.6 ஆயிரம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.


 

கடந்த 2011-ம் ஆண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 5,319 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரூ.66 கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றார்கள். அதையும் சேர்த்து தள்ளுபடி செய்து உள்ளோம். பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 410 கோடி பெற்று தந்துள்ளோம். சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.2,034 கோடி கொடுத்து குறைந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 4 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
 

கிராமங்களில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்பட்டு அதற்கு தேவையான அனைத்து விளையாட்டு பொருட்களும் வழங்கப்படுகிறது. தற்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தை பொங்கலுக்கு அனைத்து குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மீண்டும் அனைத்து தொழிலாளர் குடும்பத்திற்கும் ரூ.2000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் அனைவருக்கும் கொடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கே.வி. குப்பத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும். இவ்வாறு பேசினார். 
 

சார்ந்த செய்திகள்