கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தோட்டக்கலை அமைச்சராக இருக்கும் முனிரத்னா கடந்த மார்ச் 31 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில்; "கிறிஸ்தவர்கள் தற்போது வரை மதமாற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மத மாற்றம் செய்ய வருபவர்களை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்" என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சானது மக்கள் மத்தியிலும், கர்நாடக அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இவரின் இந்த பேச்சு குறித்து அரசு அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் முனிரத்னா மீது போலீசார், இருவேறு மதத்தினரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், குற்றத்தை தூண்டுதல் மற்றும் மதரீதியாக விரோதத்தை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.