நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக கட்சி இடம் பெற்றது. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் பாமக போட்டியிட்ட 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் படுதோல்வி சந்தித்தது. இதனால் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதிமுகவில் கட்சி சீனியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருந்தாலும் தேர்தலின் போது சொல்லப்பட்ட ஒப்பந்தத்தின் படி, பாமகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது.
பாமக சார்பாக அன்புமணி மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்றதும் பிரதமர் மோடியை சந்தித்து முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஏழு பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். பின்பு பாஜக தலைமையை சந்தித்த அன்புமணி மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பாமகவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு பாஜகவும் ஆலோசித்து முடிவு சொல்லுவதாக தெரிவித்ததாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி மீது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அன்புமணி அனுமதி கொடுத்து பல கோடி ருபாய் லஞ்சமாக பெற்றார் என்று கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அன்புமணி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2015ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை ரத்து செய்யும் படி அன்புமணி சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அதன்படி 2015ம் ஆண்டு அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.இதனால் அன்புமணிக்கும், பாமக கட்சியினரும் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.